நான் சில்வியாவிடம் கேட்ட
கேள்விக்கு அவள் என்ன பதில் கூறி இருப்பாள் என்று நீங்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது
தெரிகிறது.நீங்கள் எதிர்பார்த்ததுபோல், பெரிய ஆச்சர்யங்களுடன் கூடிய நிகழ்ச்சி எதுவும்
நடக்கவில்லை.அவள், என்னிடம் இருந்து 'அந்த கேள்வியை' எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கிறன்.அவள்
கண்களில் ஒரு சிறிய குழப்பம்.உடனடியாக சுதாரித்து கொண்டு, சைக்கிளை என்னிடம் தந்து
ஓட்டி பார்க்கச் சொன்னாள்.எங்களிடையே நடந்த அந்த சைக்கிள் பரிமாற்றம், ஒரு நல்ல நட்பாக
மலர்ந்தது.
அதுவரை உணர்ந்திராத, ஒரு புத்தம்
புது மலர் பூத்தது போன்ற இனிய அனுபவத்தை அந்த நட்பு எனக்கு தந்தது.அவள் மதிய இடைவெளியில்
என்னோடு ஒரு புது விதமான விளையாட்டை ஆரம்பித்தாள். 'Hide and Seek' என்று அழைக்கப்படும்
விளையாட்டை வித்தியாசமான முறையில் கற்று கொடுத்தாள். கசக்கி எறிந்த காகிதத்தை என் கண்ணில்
படும்படி வீசி விட்டு செல்வாள்.அதை எடுத்து பார்க்கும் போது அவள் அங்கிருந்து நகர்ந்து
சென்று விடுவாள்.அந்த கசங்கிய காகிதத்தில் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு
இடம் வரையபட்டிருக்கும்.அந்த இடத்தை நான் கண்டு பிடித்து அங்கு போய் சேரும்போது, எனக்காக
இன்னொரு காகிதத்தை விட்டு சென்றிருப்பாள்.அந்த காகிதத்தை வைத்து நான் அடுத்த இடத்தை
கண்டுபிடித்து சேர வேண்டும்.ஆங்கிலத்தில் 'Treasure Hunt' என்று அழைக்கப்படும் இந்த
விறுவிறுப்பான விளையாட்டு கடைசியில் வகுப்பறையில் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் சிறு
புன்னகையுடன் முடிவுக்கு வரும்.
குறும்பு வயதில் அரும்பிய
நட்பு ஆரம்பித்த விதம் வேடிக்கையாக இருந்தாலும், இன்று கூட என் உதட்டில் புன்னகை வரவழைக்கும்
நட்பு அது.எங்கள் உறவு அப்படியே தொடர்ந்து, நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம்.பள்ளி
நேரம் முடிந்து, இருவரும் சைக்கிள்களை எடுத்து கொண்டு சவாரி செல்வோம்.நிழல்தரும் மரத்தினடியில்
நிறுத்திவிட்டு கதை கதையாய் பேசினோம். என்னை அறியாமலே நான் அவளுடன் மிக நெருங்கிய நண்பனானேன்
.இப்படியே வளர்ந்துகொண்டிருந்த எங்கள் நட்பு திடீரென்று முடிவுக்கு வந்தது.
ஒருநாள் நாங்கள் இருவரும்
பஸ் நிலையத்தில் சந்தித்து பேசி கொண்டிருந்தோம்.சில்வியாவின் தந்தை எங்களை அப்போது
பார்த்ததுதான், எங்கள் நட்பை முடிவுக்கு கொண்டுவந்தது.இப்படியாக முடிந்த என் முதல்
ஈர்ப்பு அல்லது நட்பு என்னில் பெரிய பாதிப்பை அப்போது ஏற்படுத்த வில்லை.சில்வியா திரும்ப
ஜெர்மனிக்கு திரும்ப போக வேண்டி வந்தது.தான் கண்டிப்பாக தொடர்பில் இருக்க போவதாக ஒரு
கடிதம் மூலம் தெரிவித்த அவள், சொன்னது போலவே இரண்டு மாதங்கள் ஜெர்மனியில் இருந்து கடித
தொடர்பில் இருந்தாள்.அந்த கடிதங்கள் நின்ற போதுதான், உண்மையில் அவளின் நட்பையும் அதன்
தாக்கத்தையும் அதன்மூலம் வந்த வலியையும் உணர்ந்தேன்.
சில்வியா இப்போது எங்கிருந்தாலும்,
எங்களுடைய அந்த இனிய நட்பை மறந்திருக்க மாட்டாள் என்றே நினைக்கிறன்.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு
நகர வேண்டியது தானே, மனிதனின் இயல்பு.நானும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன்.
என்னுடைய கவனத்தை முழுமையாக
படிப்பிலும் விளையாட்டுகளிலும் செலுத்தினேன்.பள்ளியில் சமஸ்கிருதம் மொழி எனக்கு கடினமாக
இருந்ததினால், தந்தையிடம் கேட்டு, காந்தி நகர், அடையாரில் உள்ள St. Patrick's பள்ளிக்கு
மாற்றிக் கொண்டேன். படிப்பின் இடையே குறும்புகளும் சேட்டைகளும் குறையவில்லை என்றாலும்,
என் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் பெருமை படும் வண்ணம் நல்ல மதிப்பெண்களையும்
வெகுமதிகளையும் பெற்று தந்தேன். அதனால் ஒன்றும் என் சேட்டைகளுக்கான தண்டனை ஒன்றும்
குறைக்கப்படவில்லை.இன்றும் பசுமையான நினைவுகளாய் என் மனதில் இருக்கும் ஆசிரியர்களும்
சக நண்பர்களும் அந்த கால நிகழ்வுகளும் என்னை வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடுகின்றன.
பாதிரியார் சகோ.பிரான்சிஸ்,
நண்பர்கள் சலைவன், பார்னெட், சலீம் என்று இன்னும் பலர் என் நினைவில் இன்றும் உள்ளனர்.
படிப்பு, விளையாட்டு, நட்பு
மற்றும் உறவுகள் என்று வாழ்வின் அனைத்து அம்சங்களையும் எப்படி பக்குவத்துடன் அணுகுவது
என்பதை எளிதில் கற்று கொண்டேன்.வாழ்வின் அடிப்படை கோட்பாடுகளை, அதனை கையாளும் திறமைகளை
வளர்த்துக்கொண்டேன்.
இதன் பிறகு மிக முக்கிய திருப்பு
முனையாக, இன்று வரை சென்னையில், மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான 'லயோலா' கல்லூரியில்
படிப்பை தொடர்ந்தேன்.வேடிக்கை, விளையாட்டு, பெற்றோரின் கட்டுபாட்டில் இருந்து சுதந்திரம்
என்ற அனைத்தும் உள்ளடக்கிய கல்லூரி வயது.இந்த சுதந்திரத்தை நான் எப்படி பயன்படுத்தினேன்.
அதனால் என்ன நேர்ந்தது...
அடுத்த அத்தியாத்தில் ......
No comments:
Post a Comment