Thursday, 4 August 2016

புரியாத தேடல் - 5

என் முதல் காதல் மலர்ந்த விதத்தை அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்திருப்பீர்கள் என்று தெரியும்.அடையாரிலிருந்து எழும்பூர் செல்லும் பஸ் எண் 23. நிர்மா வெளுத்த வெள்ளை என்று அந்த காலத்தில் வெள்ளை நிறத்துக்கே தனி அங்கீகாரம் கொடுக்கப்பட்ட தூய்மையான வெள்ளை நிறத்தில், நன்கு கஞ்சி போட்டு சலவை செய்த சேலையை அவள் உடுத்தி இருந்த விதம் பார்த்தவுடனே என்னை கவர்ந்தது. மற்ற பெண்களிடம் இருந்து அவள் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.காண்பவர்களை கவரும் வகையில் இருக்கிறோம் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.அவளை பற்றி அவளிடமே இருந்த அந்த புரிதல், மேலும் அவளுக்கு அழகு சேர்த்ததுபோல் எனக்கு தோன்றியது.தினமும் ஒன்றாகவே பயணம் செய்ததால் ஒரு வித பரிச்சயம் உண்டானது.என்னுடைய கட்டான உடல் கட்டும் தோற்றமும் அவளை கவர்ந்திருக்கலாம்.கண்கள் பரிமாற்றம் வழியாக மலர்ந்த அந்த நட்பு புன்சிரிப்புகளுடன் வளர்ந்து, காதலாக மாறியது என உணர்ந்தேன்.இந்த நட்பு, சில்வியாவுடனான நட்பிலிருந்து வேறுபட்டு இருந்தது எனக்கு புரிந்தது.
எங்களது இந்த நட்பு கல்லூரியில் பிரபலமானது.ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த அன்பும் அதிகமாகியது.இருவரும் சேர்ந்து வெளியில் சுற்றும் நேரம் அதிகமானதால், படிப்பின் மேல் எனக்கு இருந்த கவனம் முழுமையாக வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. நல்ல உடைகளை தேர்ந்து எடுத்து அணிவதிலும், அவளுடன் சேர்ந்து காபி அருந்த வெளியில் செல்வதிலும் ஸபையர் திரை வளாகத்தில் இருந்த ப்ளூ டைமண்ட் திரையரங்கதில் திரைப்படம் பார்ப்பதிலும் என் கவனம் முழுக்க சென்றது. அந்த உறவினை காதல் என்று அழைப்பதா அல்லது அந்த பருவத்தில் வரும் ஒரு விதமான ஈர்ப்பு என்று அழைப்பதா என்று எனக்கு தெரியவில்லை.ஒன்று மட்டும் புரிந்தது, எனக்கு கல்லூரி தேர்வுகளை விடவும் அதில் வெற்றி பெறுவதை விடவும், அவளுடன் செலவிடும் நேரத்தை பற்றிய கவனமே அதிகமாக இருந்தது.அதுவே முக்கியமாக இருந்தது.
இது ஒரு பொறுப்பற்ற செயல் என்பதோ, சரியான நடவடிக்கை இல்லை என்பதோ என்னால் உணரமுடியவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தைக்கு இருக்கும் கடமை, அதை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் சிரமம், வலி இவை ஒன்றுமே என்னை மாற்றவில்லை.மேலும் மேலும் பொறுப்பில்லாத மாணவனாகவும் மகனாகவும்தான் திரிந்தேன்.
இப்படியே சென்று கொண்டிருந்த என் பொறுப்பற்ற பயணம், திடீரென்று ஒருநாள் முடிவுக்கு வந்தது.என்னை சரியான பாதையில் திசை திருப்புவதற்காகவே நடந்த ஒரு தெய்வீக செயலாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்றதை என் தந்தை பார்த்ததை தொடர்ந்து, வீட்டில், பஞ்சாயத்து நடந்தது.அனைத்து விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
தந்தையின் கடுமையான வார்த்தைகளை விட, நான் என் வாழ்க்கையில் அந்த மாணவ பருவத்தில் அப்படி நடந்துகொள்வது என் எதிர்காலத்தை எப்படி பாதிக்க போகிறது, இது போன்ற கவனச்சிதறல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்படி தடையாக இருக்கிறது என்பதை மிகுந்த வலியுடன் என் தந்தை விளக்கியவிதம், எனக்கு மிக பெரிய பாடத்தை புகட்டியது. இது போன்ற ஈர்ப்புகள், பின்னாளில் படிப்பை முடித்து வாழ்க்கையில் முன்னேறிய பின் நிகழலாம் என்று அவர் கூறிய விதம் என்னை தலை குனிய வைத்தது என்று சொல்வதை விட, தலை நிமிரச் செய்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

வீட்டின் சூழ்நிலை, தந்தையின் குடும்ப சுமை, இவை அனைத்தையும் பார்த்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்னும் அன்னையின் வலி, அனைத்தும் சேர்ந்து எனக்கு நிலைமையை புரிய செய்தன.
பிரிய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம்.இருவருக்கும் பிரிவு மிகுந்த வலியை தந்தாலும், எங்களின் முன்னேற்றத்தை கருதி, நல்ல நண்பர்களாக பிரிவதென முடிவெடுத்தோம்.அந்த முடிவு இன்று வரை என்னை வருத்தப் பட வைக்கவில்லை.இரண்டு வருடங்கள் முன்னர் ஒரு பத்திரிக்கையில் வந்த கட்டுரையில், அவளை பற்றி படிக்க நேர்ந்தது.மிகவும் பிரபலமான, வெற்றிபெற்ற ஒருவராக அவள் வளர்ந்திருப்பதை பார்க்கும்போது, உண்மையில், உள் மனதில் இருந்து வாழ்த்தினேன்.பழைய நினைவுகளில் மூழ்கி, வாழ்க்கையின் இந்த உறவுகள் அவை சுற்றி நடந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு என்னை பக்குவப் படுத்தி இருக்கிறன என்பதை உணர்கிறேன்.இந்த புரியாத தேடலில், சில புரிந்த, தெளிந்த அனுபவங்கள் கிடைத்தன.
St Patrick's பள்ளி வாழ்க்கை, லயோலா கல்லூரியில் PUC படிப்பு, புது கல்லூரியில் கணிதத்தில் பட்டபடிப்பு என்ற மாணவ பருவத்தின் அனைத்து கட்டங்களும், அரிய விலைமதிப்பற்ற நினைவுகளாக என் மனதில் இன்றும் உள்ளன.
கால்பந்து விளையாட்டு, Mr Madras University வெற்றிகள், பாடியாலா நகரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பணம் இல்லாததால் கலந்தகொள்ள இயலாத நிலைமை அனைத்தும் என் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் எல்லா திசையிலும் குவிந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய கவனத்தை முழுமையாக தாங்கள் தேர்ந்தெடுத்த திசை நோக்கி செலுத்தி, உழைப்பதற்கு தயாராக இருப்பார்களேயானால், அவர்களது இலட்சியத்தை விரைவில் அடைவார்கள் என்பது உறுதி.மீண்டும் தொடருகிறேன்.










No comments:

Post a Comment