Thursday, 4 August 2016

புரியாத தேடல் - 6

என் இளமை கால பள்ளி கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்த 15 வருடங்களில் சரி எது, தவறு எது, காதலுக்கும் பருவத்தினால் வரும் ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன, பொறுப்பான நடவடிக்கைகள் என்றால் என்ன , பொறுப்பற்ற நடவடிக்கைகள் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு என்னிடம் அப்போது பதில்கள் இல்லை.
என் மனநிலை குழப்பத்தில் சஞ்சரித்தது.என் நடவடிக்கையால் நன்மை அடைந்தேனா அல்லது ஏதேனும் இழந்தேனா என்று ஒன்றும் புரியவில்லை.அடுத்து என்ன செய்ய வேண்டும், எதிர்காலத்தில் நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும், எப்படி உயர வேண்டும் என்றும் விளங்கவில்லை.போட்டிகள் நிறைந்த இந்த உலகம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று புரியாத தருணம்.பட்டதாரியாக வேண்டும் என்று மட்டும் உறுதி இருந்தது, அதுவும் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்கு மட்டுமே என்பது புரிந்தபோது, உள்மனதில் வலித்தது.சரியான பாதையில் நான் பயணிக்கவில்லை என்பதை உணர்ந்தேன், ஆனால் அதை சரி செய்யும் வழி எனக்கு தெரியவில்லை.
எனக்கே என் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை, சரியான பாதையும் தெரியவில்லை.என் நிலைமை எனக்கே வெறுப்பாகவும், உண்மையற்றதாகவும் உணர்வற்றதாகவும் தோன்றியது.
எந்த ஒரு இளைஞனும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்திக்க கூடாத ஒரு குழப்ப நிலை.எனக்கு நேர்ந்த இந்த நிலைமை நானே எனக்கு ஏற்படுத்தியவை.என்னை யாரும் இந்த நிலைக்கு தள்ளவில்லை.நண்பர்களே, குழப்பமான எதிர்காலத்திற்கு உங்களை நீங்களே உட்படுத்தி கொள்ள வேண்டாம்.அப்படிப்பட்ட நிலைமை வெளி சூழ்நிலையால் நடப்பது என்பது வேறு.ஆனால் அதற்கு நீங்களே காரணமாக வேண்டாம்.அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக வேண்டாம்.
என் குழப்பமான மனநிலையை என் தந்தையாரால் புரிந்து கொள்ள முடிந்தது என்று நினைக்கிறன். என்னை ஊக்குவிப்பதற்காக IAS, IPS தேர்வுக்கு தயாராக்கும் பொருட்டு, சென்னையில், அப்போதைய மௌபரீஸ் சாலையில் இருந்த ஐயர் 'ஸ் அகெடமி என்ற பயிற்சி வகுப்பில் என்னை சேர்த்து விட்டார். அந்த பயிற்சி நிலையம், 100% வெற்றியை மட்டுமே கொடுத்து கொண்டிருந்த பிரபலமான இடம்.அங்கு சேர்ந்த பின்பும், தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து சேர்ந்தேனே தவிர, எனக்கு தெளிவான பாதை தெரியவில்லை.கல்லூரி தோழர்கள் அனைவரும் வேறு இடம் சென்ற காரணத்தினால், இங்கு பயிற்சி வகுப்புக்கு வரும் நண்பர்கள் நெருக்கமானார்கள். அவர்களில் பலர், புத்தக புழுவாக எப்போதும் படித்துக்கொண்டே இருப்பவர்கள் .வாழ்க்கையை வேறு கோணத்தில் அணுகியவர்கள்.இவர்கள் மத்தியில், நான்.
அங்கு சக மாணவிகள் ஷோபா மற்றும் தீபா எனும் நண்பர்களுக்கும் எனக்கும், நாங்கள் மூவரும் வெளியில் காபி சாப்பிட செல்லும்போது அடிக்கும் அரட்டை தான் பொழுதுபோக்கு. எந்த ஒரு தெளிந்த இலட்சியமும் இல்லாமல் நான் அங்கு நாட்களை கடத்தியதை அவர்கள் அருகில் இருந்து கவனித்தாலும், ஒரு நாளும், என்னிடம் அதை பற்றி கூறி என்னை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கவில்லை. எங்களுடைய இந்த நட்பு ஒருவருக்கு மற்றவருடன் இருந்த தூய்மையான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியது.
அப்போதுதான் எனக்கு, ஒரு தமிழ் செய்தித்தாள் அலுவலகத்தில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது.பயிற்சி வகுப்பை தவிர்த்து விட்டு, என் முதல் பணியான, செய்தித்தாள் விநியோக பொறுப்பை, பெங்களூரில் ஆரம்பிக்க பயணித்தேன்.செய்திதாள் விநியோகம் செய்யும் பணி எனக்கு வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டை உண்டாக்கியது. 'Newspaper boy' என்ற இந்த பணி எனக்கு வாழ்க்கையில் கற்று கொடுத்தது, அந்த வேலையின் சிரமங்கள், குடும்பத்தை விட்டு முதன்முதலில் வெளியில் சென்று வசிக்கும் அனுபவம் ஆகியவை பற்றி அடுத்து எழுதுவேன்.
இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன், ஒரு தகவல்.IAS பயிற்சி வகுப்பு நண்பர் திருமதி.தீபா கோபாலன், தோஹாவில் இந்திய தூதராக பணிபுரிந்து, சமீபத்தில், ஜப்பானில் இந்தியா தூதராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

தவற விட்ட வாய்ப்புகள் என்று பலர் எண்ணுவர்.இதை பற்றியும் மேலும் எழுதுவேன்.

No comments:

Post a Comment